Monday 5 December 2011

அமரர் கல்கி - ஒரு சகாப்தம்

அமரர் கல்கி - ஒரு சகாப்தம்

    அமரர் கல்கியை பற்றி ஒரு பக்க அளவில் சொல்ல வேண்டுமானால், உலகில் உள்ள கடல் நீரை எல்லாம் குடி நீராக மாற்றி அதில் ஒரு கை அள்ளி குடித்தால் எவ்வளவு குறைவாக இருக்குமோ, அவ்வளவு குறைவான அளவாகவே இதுவும் இருக்கும். இது மிகைபடுத்திய வாதம் அல்ல என்பது அவரை பற்றி அறிந்தோருக்கு நன்றாக தெரியும்.

    தமிழ் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு கூட, அவரின் "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு", "கள்வனின் காதலி" போன்ற நாவல்களின் பெயர் மட்டுமேனும் தெரிந்திருக்கக் கூடும். அந்த அளவிற்கு தமிழ் மக்களின் மனங்களில் இடம் பெற்று இருப்பவர் அவர். அவருடைய கதைகள் மற்றும் நாவல்களின் தாக்கத்தை இன்றைக்கும் பல திரைப்படங்களில் காண முடிகிறது. அவரின் நாவல்கள் மற்றும் கதைகளின் பெயர்களில் நிறைய திரைப்படங்கள் வெளியாகி இருப்பதை நாம் அறிவோம். அவருடைய எழுத்துக்களை படிப்பவர்கள், "இது ஏதோ ஒரு படத்தில் வந்தது போல் உள்ளதே!" என்ற உணர்வு ஏற்படாமல் கீழே வைத்திருக்க மாட்டார்கள். காரணம் - கல்கியின் படைப்புக்களை படிக்காதவர்கள் கதை எழுத்தாளர்களாகவோ, திரைக்கதை அமைப்பவர்களாகவோ இருக்க வாய்ப்பே இல்லை.

    தமிழில், ஆங்கில படங்களுக்கு இணையாக கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இல்லையே என்று வருந்துவோருக்கு கல்கியின் வரலாற்று புதினங்கள் படித்தால் அதைவிட மேலானதொரு படம் படிப்பவர்கள் கண்முன் ஓடும் என்பது உறுதி. விடுதலைக்கு முன்னர் அவர் தன்னுடைய எழுச்சிமிகுந்த எழுத்துக்களின் மூலம் ஒரு அமைதியான புரட்சியையே உருவாக்கினார். அவருடைய "பார்த்திபன் கனவு", "சிவகாமியின் சபதம்" மற்றும் "சோலைமலை இளவரசி" போன்ற வரலாற்று நாவல்கள், வரலாற்றை மற்றுமல்லாமல் வீரத்தையும், சுதந்திர உணர்வையும் மக்களின் மனதில் நன்றாக பதிய செய்தது. மேலும், அரசர்களின் காலங்களில் எவ்வளவு போர்கள் நடந்திருந்தாலும், அந்த போர்களின் வன்முறைகளை பெரிது படுத்தாமல், அந்த வீர புருஷர்களின் வீர சாகசங்களையும், அஞ்சா நெஞ்சத்தையும், நாட்டுப்பற்று உணர்வையும் அழகான அஹிம்சை முறையில் வலியுறுத்தி எழுதுவதில் கல்கிக்கு நிகர் கல்கி மட்டும் தான் என்பதில் ஐயமில்லை. அவர் வரலாற்று நாவல்கள் மட்டுமின்றி பல சமூக நாவல்களும் படைத்திருக்கிறார். அவருடைய "கள்வனின் காதலி", "தியாக பூமி", "அபலையின் கண்ணீர்", "அலை ஓசை", "புன்னைவனத்து புலி" போன்ற சமூக நாவல்கள் மிகுந்த வரவேற்ப்பை பெற்றன.

    1899 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 - ஆம் நாள், புட்டமங்கலம் என்னும் ஊரில் பிறந்த அவர், மகாத்மா காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய 22 - ஆம் வயதில் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிலமுறை சிறை சென்றிருக்கிறார். சிறையில் திரு. ராஜகோபலாச்சாரி மற்றும் சதாசிவம் போன்றோர்களின் நட்பு கிடைத்ததின் மூலம் பத்திரிக்கை துறையில் நுழைந்தார். திரு. வி. கல்யாணசுந்தரம் அவர்களின் "நவசக்தி" என்ற நாளிதழின் துணை ஆசிரியராக செயல்பட்டு தனது முதல் நாவலான "சாரதியின் தந்திரம்" என்ற நூலை 1927 - ஆம் ஆண்டு வெளியிட்டார். பிறகு "ஆனந்த விகடன்" என்ற வார இதழில் பண்ணியாற்றினார். "கல்கி", "ரா. கி", "தமிழ் தேனீ", "கர்நாடகம்" என்ற பல புனை பெயர்களில் அவர் எழுதிய பல சிறுகதைகளும், தொடர்கதைகளும் அவ்விதழில் வெளியாகின.

    கல்கி அவதாரம் என்பது விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமாகும். கலியுகத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும், இவ்வுலகில் தருமத்தை நிலைநாட்டுவதற்காகவும் எடுக்கப்படும் அவதாரம் என்று இந்து சமுதாயத்தில் நம்பப்படுகின்றது. ரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட அவர் தனது எழுத்துக்கள் மூலம் இவ்வுலகில் நிறைய மாற்றங்களை உருவாக்க எண்ணினார். மேலும் தன்னுடைய நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் பாத்திரமான திரு. கல்யாண சுந்தர முதலியார் அவர்களின் பெயரில் உள்ள "கல்" என்ற வார்த்தையையும், தன் பெயரின் முதல் எழுத்தான "கி" என்ற எழுத்தையும் இணைத்து "கல்கி" என்ற புனைபெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.


    பின்பு 1941 - ஆம் ஆண்டு தனது நண்பர் சதாசிவத்துடன் இணைந்து "கல்கி" என்ற வார இதழை ஆரம்பித்து நடத்தி வந்தார். அந்த மகா எழுத்தாளர் 1954 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 - ஆம் நாள் அகால மரணமடைந்தார். அவருடைய 57 - வது நினைவு நாள் இன்று (டிசம்பர் 5, 2011) அனுசரிக்கப்படுகின்றது. அவரது மறைவுக்கு பின்னர் , 1956 - ஆம் ஆண்டு அவருடைய "அலை ஓசை" என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

    அவர் மாண்டாலும் அவருடைய படைப்புக்கள் அவர் பெயரை என்றும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.
 
    வாழ்க உனது புகழ் ! வாழ்க உனது எழுத்துக்கள் !

No comments:

Post a Comment